காப்புக்காடு பகுதியில் இளம் பெண் கொன்று புதைக்கப்பட்டுள்ளரா என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வடஅகரம் காப்புக்காடு பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பிணம் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் மரக்காணம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அதில் குப்பைகள் கிடந்த இடத்தில் ஒரு பெரிய சாக்குப் பையில் பாதி வெளியே தெரிந்தபடி உடல் புதைக்கப்பட்டு இருந்தது.
அதன்பின் காவல்துறையினர் அதை தோண்டி வெளியே எடுத்து பார்த்தபோது அந்த சாக்குப்பையில் அழுகிய நிலையில் 30 வயதுள்ள ஒரு இளம்பெண் பிணமாக இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் காவல்துறையினர் அதை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் பிணமாக கிடந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக கொன்று புதைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.