பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி ஆவார். இவர் தமிழில் பிரபு தேவாவுடன் “மிஸ்டர் ரோமியோ” படத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இவர் தொழிலதிபர் ராஷ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஷமிஷா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி தொலைக்காட்சி நடிகையான சுமிருதிகன்னாவின் மகள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மும்பை ஜூஹு பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு தன் மகளுடன் சென்றிருந்தார். இதையடுத்து விழா முடிந்ததும் அவர் வீட்டுக்கு திரும்ப தன் காரில் வந்து ஏறினார்.
அப்போது வாலிபர் ஒருவர் திடீரென காருக்குள் அத்துமீறி ஏறி உட்கார்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாலிபரை உடனே கீழே இறங்குமாறு கண்டித்துள்ளார். அப்போது உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை காரில் இருந்து வெளியே இழுத்தனர். அதன்பின் கார் கதவை அடைத்து ஷில்பா ஷெட்டியை அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் ஷில்பா ஷெட்டியுடனும், அவரது மகளுடனும் போட்டோ எடுப்பதற்காக வாலிபர் காரில் ஏறியதாக தெரிவித்து உள்ளார்.