பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டிருக்கும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வழியாக தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடை அருகில் உள்ள கீழ் தளத்திற்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு பாகங்கள், வெடிமருந்து பொருட்கள் அனைத்தையும் சேகரித்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது இரண்டு பேர் வெடிகுண்டு வீசியதும், அதில் சுவர் சேதமடைந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் அங்குள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்துவரும் மணக்கரை பகுதியில் வசித்து வந்த சுடலை(26) என்பவதும் தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து அவரை நேற்று கைது செய்துள்ளனர். மற்றொரு நபர் யார் என்று குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுடலை உட்பட இரண்டு பேர் கோவில் கொடை விழாவில் பயன்படுத்திய பட்டாசுகளில் இருந்த வெடிமருந்தை சேகரித்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை வெடிக்க பார்த்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஏன் நாட்டு வெடிகுண்டு தயாரித்தார்கள் என்றும், ஏதேனும் சதித்திட்டம் தீட்டுவதற்கு தயாரித்தார்கள் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.