நெல்லை அருகில் கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
நெல்லை மாவட்டம், மானூர் அருகில் நாஞ்சான்குளம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் கட்டிட காண்டிராக்டர் ஜேசுராஜ்(73). இவர் தம்பி மரியராஜ்(56) கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வந்துள்ளார். இவர்களுடைய சகோதரி வசந்தா(40) பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கும் அதே ஊரிலுள்ள இவர்களுடைய சித்தப்பா மகனான அழகுமுத்து என்பவருக்கும் இடையில் நில தகராறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக இரண்டு குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து மானூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த இடத்தில் அழகுமுத்து தரப்பினர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது ஜேசுராஜ், அவரது தம்பி மரியராஜ், சகோதரி வசந்தா மற்றும் அவரது கணவர் ஜேசுராஜ்(43), மரியாவின் மகன் ஆமோஸ்(23) உள்ளிட்டோர் அங்கு வந்து பிரச்சனை இருக்கின்ற இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் அழகுமுத்து தரப்பினர் காண்ட்ராக்டர் ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகியோரை அரிவாளால் வெட்டினார்கள். இதனால் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த ஆமோஸ், வசந்தாவின் கணவர் ஜேசு ராஜ் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலையாளிகளை பிடிக்க டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் உத்தரவின்படி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கொலை தொடர்பாக அழகுமுத்து, அவருடைய மனைவி பேச்சியம்மாள், செந்தூர்குமார், ராஜ மணிகண்டன், ராஜலட்சுமி, ராஜ சுந்தரபாண்டியன் ஆகிய ஆறு பேரையும் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் 2 பேரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் உடல்களும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த உடல்களை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, அவர்கள் இந்த கொலையில் முக்கிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்றும், கொலையானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரையும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.