தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என்று மாற்றம் செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை கேள்வி நேரத்திற்கு பின் தொழில்துறை மற்றும் தமிழ்ப்பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள் “தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என்று மாற்றம் செய்யப்படும்.
இதையடுத்து மாநில அளவில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும். கிருஷ்ணகிரியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா ரூபாய் 1,800 கோடியில் 3,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். சுற்றுச் சூழலின் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும். தஞ்சாவூர், உதகையில் ரூபாய் 70 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.