‘ராஜாவுக்கு செக்’ படத்தை பெற்றோர்கள் தங்களது குழந்தைளோடு சேர்ந்து பார்க்க வேண்டும் என்று இயக்குநரும், நடிகருமான நடிகர் சேரன் கூறியுள்ளார். இதுகுறித்து சேரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் மற்றும் அனைத்து பெற்றோர்களும் பயந்து கொண்டிருக்கும் விஷயம் குறித்த படமாக ‘ராஜாவுக்கு செக்’ அமைந்துள்ளது. நம் குழந்தைகள் தவறான பாதையில் செல்லக்கூடாது என்று பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் இப்படம் வந்துள்ளது.
இந்தப் படத்தில் அதற்கான வழிமுறை, தீர்வு ஆகியவை சொல்லப்பட்டிருக்கிறது. பயத்திலிருந்து பெற்றோர்களை வெளிக்கொண்டு வருவதற்கும், பிள்ளைகள் தைரியமாக வளர்வதற்கும் ஒரு வாய்ப்பை படம் ஏற்படுத்தி இருக்கிறது. படத்தை அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும். படத்தில் பெண் குழந்தைக்கு தந்தையாக நடித்திருக்கிறேன். என்னுடைய கேரியரில் இது முக்கியமான படம். எனக்கு சவாலாகவும் அமைந்தது.
குழந்தைகள் தவறான பாதையில் செல்வதற்கு இணையதளமும் ஒரு காரணம். அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுய கட்டுப்பாடும் தேவை. பெற்றோர்கள் எதை பிள்ளைகளுக்கு எந்த அளவுக்கு கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளை பாதுகாக்க சரியான பாதையை பெற்றோர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். அதையும் ‘ராஜாவுக்கு செக்’ படம் கூறுகிறது” என்றார்.
திரில்லர் பாணியில் வெளிவந்திருக்கும் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் கதையின் நாயகனாக சேரன் நடித்துள்ளார். இர்பான் வில்லனாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே, சராயு, நந்தனா வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சாய் ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் பொற்றோர்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையம்சத்தில் உருவாகியுள்ளது.