கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 நபர்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கியுள்ள தீர்ப்பில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அதாவது 20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். 20.03.2022-க்கு பிறகு கொரோனாவால் உயிரிழந்திருந்தால் நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள், அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் (District Revenue Officer) முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவை ஒவ்வொரு இடமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வுகாணும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.