ரஷியா,மருத்துவ உபகரணங்களை இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷிய படைகள், உக்ரைன் நாட்டின் மீது 55-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு யுக்திகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் இப்போரினால் உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ரஷியா மற்றும் உக்ரைனில் இருந்தே கிடைக்கும் நிலையில், இப்போரின் தாக்கத்தால் அவற்றின் தயாரிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் ரஷியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள சூழலில், ரஷியாவின் வணிகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐரோப்பா மற்றும் சீனாவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்முதலும் அந்நாட்டில் குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு ரஷியா முடிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து இது குறித்து வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள இணைய சந்திப்பில் ரஷியா மற்றும் இந்திய மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . மேலும் இந்த வணிகங்கள் டாலரில் இல்லாமல் ரூபிள் மற்றும் இந்திய ரூபாயில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.