Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

‘அமாவாசை பௌர்ணமியான கதை’ – வரலாற்று நினைவோடு வழிபாடு

திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய அம்மனின் திருவிளையாடல் நிகழ்வை நினைவுகூறும் விதமாக சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் பிரசத்தி பெற்ற ஸ்தலமாகும். முன்னொரு காலத்தில் தை அமாவாசை தினத்தன்று, அம்மனை வழிபட வந்த சோழமன்னரிடம், அம்மனின் தீவிர பக்தரான அபிராமிபட்டர், இன்று பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மன்னர், இன்று பௌர்ணமி இல்லை என்றால், மரணதண்டனை விதிக்கப்படும் என்றார்.

இதனையடுத்து, அபிராமி பட்டர் நெருப்பிற்கு மேலே 100கயிறுகள் கொண்ட ஊஞ்சல் அமைத்து அம்மனை நினைத்து, அபிராமி அந்தாதியை பாடினார். ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும், ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது, 79வது பாடல் பாடும்போது, அம்மன் நேரில் தோன்றி முழுநிலவை தோன்றச்செய்து, அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது.

அதன்படி, தை அமாவாசையான நேற்று நள்ளிரவு அம்மன் முன் பட்டரின் சிலை அமைக்கப்பட்டு, ஓதுவார்கள் ஒவ்வொரு பாடலாக பாடினர். ஒவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 79 பாடலின் முடிவில், நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாரதனை காட்டப்பட்டு, 100பாடல்கள் பாடி நிறைவுசெய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |