இன்றைய சமூகத்தில் பொழுது போக்க்காக ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தளங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக தற்போது டிக் டாக்கிலும், பப்ஜி விளையாட்டுகளிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதில் பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு பல நாடுகள் யோசித்து வருகின்றன. இந்தியாவில் குஜராத் அரசு ஏற்கனவே இதற்கு தடை விதித்துள்ளது.
மேலும் சில நாடுகள் பப்ஜியை தடை விதிக்க உத்தரவிட்டுள்ளது.தற்பொழுது இந்தியாவைப் பொருத்தவரை போதைக்கு அடிமையானவர்களை விட PUBG விளையாட்டிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த விளையாட்டால் அவ்வபோது சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விளையாட்டை விளையாடும் பொழுது இளைஞர்கள் தங்களை மறந்து அதில் மூழ்கி விடுகின்றனர்.
அந்தவகையில் , மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பப்ஜிக்கு அடிமையாக இருந்துள்ளார். இவர் ஆக்ரோஷமாக வெறிகொண்டு பப்ஜி விளையாடியபோது மூளை பக்கவாதம் ஏற்பட்டு மரணமடைந்தார். புனே அருகே இருக்கும் ஷிண்டேவாடி பகுதியைச் சேர்ந்தவர் தான் 25 வயதான இளைஞர் ஹர்ஷல் மீமான். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சோக சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், அதிக ஆர்வத்துடன் அந்த இளைஞன் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப் போது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு இளைஞர் மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பப்ஜி கேம் மட்டுமின்றி எந்த கேமாக இருந்தாலும் சரி அதிக நேரம் விளையாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவம் நடப்பது வேதனை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. முடிந்த அளவிற்கு நாம் செல்போனில் கேம் விளையாடும் போது அதில் முழ்கி கிடக்காமல் லிமிட்டாக வைத்துக்கொள்வது அவசியம்.
அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்களில் மூழ்கி கிடப்பதை பார்த்தால் அதனை கண்காணித்து, மொபைல் போன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கூற வேண்டும். அவ்வாறு விளக்கி கூறினால் அவர்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.