கோதவாடியில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க செயின், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் உள்ள கோதவாடியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு கோதவாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தினமும் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கோவில் பூசாரி பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் கோவிலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே திறந்து பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்த நிலையில், அம்மனின் கழுத்தில் கிடந்த 4 கிராம் தங்க தாலி செயின் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் ஊர் பொது மக்களுக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு திருமால், கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் திருட்டு நடந்த கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அதன்பின் திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை தடயங்களும் சேகரித்தனர். இந்த கோவிலில் கடந்த 2 1/2 வருடங்களுக்கு முன் கொள்ளையர்கள் பாத்திரங்களை திருடி சென்றுள்ளனர்.
தற்போது இரண்டாவது முறை மீண்டும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருடு போன சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.