இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, தன் ட்விட்டர் பக்கத்தில் ரம்புக்கனையில் நடந்த துயர சம்பவத்தால் அதிக மன உளைச்சலில் இருப்பதாக பதிவிட்டிருக்கிறார்.
இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தது. எனவே, மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரம்புக்கனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
அப்போது, ஒருவர் பலியானதாகவும் 13 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் உயிருக்குப் போராடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அப்பகுதியில் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இலங்கை நாட்டின் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ரம்புக்கனையில் நடந்த துயர சம்பவத்திற்கு பின் எனக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட்டது. அனைத்து நேரங்களிலும் இலங்கைக்கு அதிக கௌரவத்துடன் சேவை புரிந்து வரும் இலங்கை காவல்துறையினரால் கடுமையாக பாரபட்சமில்லாத விசாரணை நடத்தப்படும் என்று எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது.
உரிய மரியாதையுடனும், கௌரவத்துடனும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் குடிமை உரிமையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியிருக்கிறார்.