கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 522 மாணவர்களுக்கு கனிமொழி எம்பி பட்டங்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி கூறியதாவது: மருத்துவத்துறையில் நாம் சாதித்து விட்டோம் என்று நினைத்தபோது தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவ்வாறு சாதித்த பின்னர் நான்தான் என்ற மனநிலைக்கு மாணவர்கள் போய் விடக்கூடாது. கிராமங்களில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் அரசு கலைக் கல்லூரிகள். நம்முடைய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்றைக்கு சிலர் கல்லூரிக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக நுழைவுத்தேர்வு என்று தடைகளை உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் கையில் தான் அடுத்த கட்ட போராட்டம் இருக்கிறது. அது நம்முடைய கடமை, நமக்கு கிடைத்து விட்டது. அடுத்த தலைமுறை எதிர்கால தலைமுறைக்கு கிடைக்கவேண்டும். உங்களால் எந்த தடையும் தாண்ட முடியும், சாதிக்க முடியும். கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி கொண்டுவர முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பாடுபட்டு வருகிறார். இந்த மேடையில் கட்சி பாகுபாடுகளை தாண்டி அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.