சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபரில் அளித்த புகாரின் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு டிசம்பர் 1-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கடந்த 8ஆம் தேதி விசாரித்தது. மேல்முறையீட்டு மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், சாட்சிகளை அச்சுறுத்தி ஆதாரங்களை கலைத்துவிடுவார். எனவே சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கலைக்க முயற்சித்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.