விஜய் படங்கள் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சமே கிடையாது. அது தோல்வி படமாக இருந்தாலும் சரி வெற்றி படமாக இருந்தாலும் சரி. வெற்றி படங்கள் என்றால் அரசியல் ரீதியான பிரச்சனைகளோ இல்லை வேற விதமான பிரச்சனைகளோ வரும். அதே தோல்வி படமாக இருந்தால் கிண்டல்கள், ரசிகர்களிடையே மோதல்கள் என கிளம்பும். இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்திருக்கிறது.
எனவே ரசிகர்கள் சிலர் விஜய்யின் தோல்வி படங்களில் இருக்கும் ஒரு ஒற்றுமையை சுட்டிகாட்டிவருகின்றார்கள். அதாவது விஜய் எப்போது மிருகம் தொடர்பான பட தலைப்புகளை வைக்கின்றாரோ அப்போதெல்லாம் அப்படம் தோல்வியே சந்தித்திருக்கிறது என ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜயின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்று சொன்னால் அது கில்லி தான். 2004ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இன்றளவும் இருக்கிறது. இதே கூட்டணியில் 2008 ஆம் ஆண்டு வெளியான குருவி திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் விமர்சனத்திற்கு உள்ளானது.
அடுத்ததாக விஜயின் திரை வாழ்க்கையில் அவர் மறக்க நினைக்கும் படம் சுறா. 50வது படமான சுறா அதை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ராஜ்குமார் இயக்கிய இந்தப் படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் இந்தப்படம் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வியடைந்தது. மேலும் இந்தப் படம் விஜய்யின் மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து , இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பாரப்பில் இருந்தனர்.
ஆனால் எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. என்னதான் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை என்பதால் விமர்சனத்துக்கு உள்ளானது.