Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்…..!!!!!!

சென்னையில் ஏராளமான இடங்களில் மக்கள் முகக்கவசம் இன்றி செல்வதை பார்க்க முடிகிறது. ஏனென்றால் சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்துவிட்டதே என்ற அலட்சியம்தான். கடந்த ஏப்ரல் முதல் வாரத்துக்கு முன்புவரை சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. அப்போது 100-க்கும் கீழ் தான் கொரோனா நோயாளிகள் இருந்தனர். மேலும் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலையும் உருவாகியது. இதனால் மக்களும் சென்னையை விட்டு கொரோனா ஓடிவிட்டது என்று பெருமூச்சு விட்டனர். ஆனால் தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்போது பாதிப்பு எண்ணிக்கை குறைவு என்றாலும், குறைந்து வந்த போக்கு மாறி, அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

அதாவது கடந்த 18 ஆம் தேதி சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 99 ஆக இருந்த நிலையில், அது நேற்று 103 ஆகவும், இன்று 109 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோன்று தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில் தான் இரட்டை இலக்கத்தில் பாதிப்பு இருந்தது. இப்போது இதில் கோடம்பாக்கமும் இணைந்துகொண்டது. ஆகவே மக்களே கொரோனா ஓடிவிட்டது, ஒழிந்து விட்டது என்று நினைக்காமல் பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சென்னையை போன்றே தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் சென்ற வாரத்தில் தினசரி 25 பேருக்கு குறைவாகவே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் மீண்டும் 25 நபர்களுக்கு மேல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் நேற்று மட்டும் 30 நபர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இருப்பதாவது “தில்லி, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டுமாக கொரோனா அதிகரித்து வருகிறது. ஆகவே தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அதன்பின் பொதுயிடங்களில், மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மாஸ்க் அணிவதை உறுதிசெய்ய வேண்டும். அதனை தொடர்ந்து பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதை அடுத்து கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |