தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது ” தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடர்ந்து மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக. தலைமையிலான அரசுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக தமிழக மக்கள் இடையே ஆளுநர் மீது கடும் எதிர்ப்பும், கொந்தளிப்பான நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் காரணமாக கருப்புகொடி போராட்டம் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில்போட்டு தமிழக அரசை முடக்குகிற நடவடிக்கையை கண்டித்துத்தான் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கவர்னருக்கு பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதற்காக தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் (அல்லது) பதவி விலக வேண்டுமென்று கூறியிருக்கிறார். ஜன நாயகத்தில் அனுமதிக்கப்பட்ட முறையில்தான் போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டுமென்று அண்ணாமலை சொல்வதை அரை வேக்காட்டுத் தனமாகவே கருதுகிறேன். இதனிடையில் மத்தியில் ஆட்சிசெய்கிறோம் என்ற மமதையில் ஆணவத்தோடு அவர் பேசுவாரேயானால், முன்பே பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழையவிடாமல் எதிர்த்து வருகிற தமிழக மக்களால், பா.ஜ.க. என்ற கட்சியை பூதக் கண்ணாடி கொண்டு தேடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று முதல்வர், கவர்னரை நேரில் சந்தித்த தோடு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட்ட பின்பும் கூட அந்த மசோதாவை அனுப்பாமல் இருப்பது தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கிற செயலாகும்.
அதோடு கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாவை மறுபடியும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி 72 நாட்களாகியும், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் முடக்கிவைப்பதற்கு அரசமைப்புச் சட்ட விதி 200ன்படி அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அவரது செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது ஆகும். தமிழ்நாட்டில் பாஜக, மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுமேயானால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். தமிழக கவர்னரின் இத்தகைய ஜனநாயக விரோதப்போக்கை கண்டித்து காங்கிரஸ் சார்பாக கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் வரும் 28-ந்தேதி நடத்தப்படும். இவற்றில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.