இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால், மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். தினசரி பல மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, அதிபர் ராஜபக்சேவை ராஜினாமா செய்ய கோரி அவரின் அலுவலகத்திற்கு எதிரில் ஏழு நாட்களுக்கும் அதிகமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச உரையாற்றியபோது தெரிவித்ததாவது, அனைத்து கட்சி தலைவர்களும் தன்னை ராஜினாமா செய்ய கோரினால் அதற்கு தான் தயாராக இருப்பதாக சபாநாயகரிடம் அதிபர் தெரிவித்திருக்கிறார். கட்சி கூட்டத்தில் இதனை சபாநாயகர் கூறியிருந்தார். எனவே, எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து, இதை செய்வதற்கு தயாராக உள்ளோம் என்று அவர் கூறியிருக்கிறார்.