மாஸ்டர் படத்தின் வெற்றியைத் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “விக்ரம்” ஆகும். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல பேர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கமல்ஹாசன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வாயிலாக தயாரிக்கிறார்.
அனிருத் இசை அமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைபடத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் விளம்பரப் பணியில் படக்குழு தீவிரம்காட்டி வருகிறது.
அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியாகிய கபாலி படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதைப் போல் கமலின் விக்ரம் படத்திற்கு ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு செல்லும் ரயிலில் விக்ரம் படத்தின் விளம்பரம் போஸ்டரை படக்குழு இடம்பெறச்செய்துள்ளது. இவ்வாறு ரஜினி திரைப்பட பாணியில் கமல் படத்திற்கு எடுத்த முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.