உடல் சிதறிய நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் என்ஜினியரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டின் வடக்கு திசையிலுள்ள தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக வாலிபரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்துவழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கடையம் அருகிலுள்ள நாடாரூரில் வசித்து வரும் மோகன் என்பவருடைய மகனான 30 வயதான சுப்பிரமணியன் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு சுதனா என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணி சென்னையில் இருக்கும் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்ததுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் டீ குடித்து விட்டு வருவதாக கூறிவிட்டு சுப்பிரமணி வெளியே சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு அவர் திரும்பி வரவில்லை. அதன்பிறகு சுப்பிரமணி சடலமாக மீட்கப்பட்டார். எனவே சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயில்மோதி இறந்தாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.