செங்கல் சூளை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி பகுதியில் பிச்சைபிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று செங்கல் சூளைக்கு வந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிச்சைபிள்ளையை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிச்சைபிள்ளையை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிச்சைபிள்ளை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.