மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டதே மின்தடைக்கு காரணம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மின்வெட்டு விவகாரத்தில் மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துவிட நினைக்காமல், மின்வெட்டு தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் அடித்துப் பேசிய 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.இதே நிலை தொடர்ந்தால் கோடைக்காலத்தை எப்படி நகர்த்துவது என்ற அச்சமும் மக்களிடைய ஏற்பட்டுள்ளது.
மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் தடைபட்டது என்று கூறி மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துவிட நினைக்காமல், மின்வெட்டு தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.