சிறைக்கு செல்லும் வழியில் தப்பியோடிய சிறுவனை தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
தேனி மாவட்டம் போடியை சிறைக்காடு பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுக்கும், 15 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி பிரசவத்திற்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைநல குழுவினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் சிறுவனை மதுரை சிறார் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்ட நிலையில் விசாரணைக்காக ஆயுதப்படை போலீசார் சிறுவன் உள்பட 2 பேரை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறார் குற்றவழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து மீண்டும் சிறுவனை அழைத்துக்கொண்டு மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்டிப்பட்டி சோதனை சாவடியில் பேருந்து நின்று கொண்டிருந்த போது கைதான சிறுவன் திடீரென தப்பியோடியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவனை துரத்தி பிடிக்க முயன்றும் சிறுவன் தப்பியோடியுள்ளார். மேலும் மாவட்ட சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவின் உத்தரவின்படி தனிப்படை அமைத்து தப்பியோடிய சிறுவனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அந்த சிறுவன் சிறைக்காடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவனை கைது செய்தனர். இதற்கு பின்னர் சிறுவனை ஆண்டிப்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.