பட்டா வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள குள்ளபுரத்தில் வசித்து வரும் ஈஸ்வரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் மற்றும் தனிப்பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலக அதிகாரிகள் அவருக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
எனவே இதுகுறித்து குள்ளபுரம் கிராம நிர்வாக அலுவலர் விஜயனிடம் கேட்டபோது, அவர் பட்டா வழங்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த ஈஸ்வரன் உடனடியாக தேனி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பையா, ஈஸ்வரனிடம் ரசாயன பொடி தடவிய 50 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பினார்.
இதனையடுத்து ஈஸ்வரன் அந்த பணத்தை கிராம நிர்வாக அதிகார் விஜயனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக விஜயனை கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த வடுகப்பட்டியை சேர்ந்த இளமுருகன் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.