இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்தனர். அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி தலைநகர் உட்பட பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.
மேலும் ரம்புகனை பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே, ஆர்ப்பாட்டக்காரர்கள் தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சாலைகளில் டயர்களை எரிப்பது, ரயில்வே தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து வழிமறிப்பது போன்ற செயல்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்கள். அதிபரின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதோடு, போக்குவரத்தும் மொத்தமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.