கடந்த 2017ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வருமான வரித்துறையினர் வி.கே.சசிகலா வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக வி.எஸ்.ஜே.தினகரன் உள்ளிட்டோரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்திய போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மேலும் ரூ.1,600 கோடி மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம் சசிகலாவுக்கு பல்வேறு சொத்துக்களை வாங்க பினாமியாக செயல்பட்டதாக கூறி பி.எஸ்.ஜே.தினகரன், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், நவீன் பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி பினாமி சட்டத்தின் கீழ் வருமானவரித் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனை எதிர்த்து கங்கா பவுண்டேஷன், தினகரன், நவீன் பாலாஜி உள்ளிட்ட 14 பேர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறையின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இந்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், பிரசாத் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தங்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்கள் வாக்குமூலங்களை முழுமையாக வழங்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்கவில்லை என்று விவாதிக்கப்பட்டது. அதேபோல் வருமானவரித்துறை தரப்பில் தாங்கள் நடத்திய சோதனையில் கிடைத்த புகைப்படங்கள், வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுத்தது சரியானது தான். அடுத்தகட்ட அதிகாரிகளுக்கு தான் ஆரம்ப கட்ட அதிகாரி எடுத்த நடவடிக்கை சரியானதா ?இல்லையா ? என்பதை முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.