கேசி பழனி சாமியை பிப்ரவரி 07 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி பழனிசாமி அதிரடியாக நீக்கப்பட்டார். காரணம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது.
இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தொடர்ந்து கட்சியில் இருப்பதாக கூறி ஏமாற்றியதாகவும், அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாகவும் அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரளித்தார்.
இந்த புகாரின் படி கே.சி.பழனிசாமி இன்று அதிகாலை 06 : 30 மணிக்கு லாலி ரோட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.பின்னர் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கே.சி.பழனிசாமி மீது 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் கோவை நீதிமன்றத்தில் நீதிபதிமுன் ஆஜர்படுத்தினர். அவரை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.