அரியலூரில் ராட்சத இயந்திரங்கள் மூலம் ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் நிலையில் கனிமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இருக்குமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்.
அரியலூர் மாவட்டம் ஆதனக்குறிச்சி, புதுப்பாளையம் கிராமங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் ராட்சத இயந்திரங்கள் மூலம் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து வருகிறது. எதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது எனத் தெரியாமல் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
மத்திய அரசு நிறுவனம் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதால் இயற்கை எரிவாயு அல்லது ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வு பணியாக இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறைந்தது 1,000 அடிக்கும் மேல் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விடலாம் என சந்தேகம் எழுப்பும் அப்பகுதி மக்கள், விதிமுறைகளுக்கு மீறி ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் அழியும் நிலை ஏற்படும் என்று கவலை தெரிவிக்கிறார்கள்.
ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவது குறித்து கிராம நிர்வாக அலுவலருடன் கேட்டபொழுது இது குறித்து எதுவும் தகவல் இல்லை என கூறினார். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் கேட்டபோது ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.