சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியில் ஏகலைவா பழங்குடியினர் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளியில் படிக்கும் சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து அத்து மீறியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி ரூரல் மகளிர் காவல்துறையினர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்பிறகு ஆசிரியர் சுப்பிரமணியன் பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கோத்தர் இன பெண்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இவர்களிடம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மொத்த மாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் ஊட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஞான ரவி தலைமையிலான ஒரு குழு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருக்கும் ஆசிரியர் சுப்ரமணியனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கோத்தர் இன மக்கள் திடீரென என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என கூறினர். அதன்பிறகு கோத்திர் இனத்தை சேர்ந்த 3 பேரை மாவட்ட ஆட்சியர் அழைத்து பேசியுள்ளார்.
அவர்களிடம் 2 நாட்களுக்குள் ஆசிரியர் கைது செய்யப்படுவார் என ஆட்சியர் கூறினார். அதன் பிறகு அவர்கள் 3 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆட்சியர் கூறியதை தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்காத பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பதில் அளிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு காவல்துறையினர் பொதுமக்களிடம் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.