திடீரென வீட்டிற்குள் பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைகாலம் நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள், பாம்புகள் போன்ற உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி பாம்புகள் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மசினகுடி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
அந்த பாம்பு வீட்டிற்குள் படமெடுத்து ஆடியுள்ளது. இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு நாகப்பாம்பை பிடித்தனர். அதன்பின் வனத்துறையினர் பாம்பை பத்திரமாக காட்டுப் பகுதிக்குள் விட்டனர்.