ஜலகண்டாபுரம் அருகில் வாலிபரை ஈட்டியால் குத்திய கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகில் சின்னப்பம்பட்டி வெள்ளாளபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கேசவன் (23) மற்றும் கூலித் தொழிலாளியான ராமச்சந்திரன் (34). இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செலவடை பக்கத்தில் கருப்பசாமி கோவில் அருகே கேசவன், ராமச்சந்திரன் மற்றும் நண்பர் மகாலிங்கம் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை மது குடித்துக் கொண்டிருந்தார்கள்.
அதன்பின் ராமச்சந்திரனுக்கு போதை தலைக்கு ஏறிய நிலையில் கேசவனிடம் பணம் கேட்டார். அதற்கு கேசவன் பணம் தர மறுத்ததால் ராமச்சந்திரன் தாறுமாறாக திட்டினார். அதன்பின் கோபத்தில் கருப்பசாமி கோவிலில் நட்டு வைத்திருந்த ஈட்டியை எடுத்து கேசவனின் வயிற்றின் இடது பக்கத்தில் ராமச்சந்திரன் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து உடனே காயமடைந்த கேசவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராமச்சந்திரனை கைது செய்துள்ளனர்.