பக்தர்கள் விமான அலகு குத்தி வந்த கிரேன் வண்டி மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகில் தீவட்டிப்பட்டி காலனியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடனை செலுத்தி உள்ளனர். அதில் தீவட்டிப்பட்டி காலனியில் வசித்து வந்த தீபன் ராஜ்(24) என்பவர் பக்தர்கள் அலகு குத்தி வாகனத்தை இழுத்து வந்த நிலையில், அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளார். அதன்பின் விமான அலகு குத்தி வந்த கிரேன் வண்டி மீது கல்லை வீசி கண்ணாடியை உடைத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன்(50) என்பவர் தட்டி கேட்டதற்கு கோபத்தில் தீபன் ராஜ் ஊரில் பணம் வசூலித்து விட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தாமல் தெருக்கூத்து நடத்தி கொண்டுகிறார்களா என்று பிரச்சனை செய்து கீழே கிடந்த கல்லை எடுத்து கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
இதனையடுத்து ஆண்டியப்பன் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிந்து தீபன் ராஜாவை கைது செய்துள்ளார். ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்ததால் ஆத்திரத்தில் வாலிபர் கோவில் திருவிழாவில் தகராறு செய்த சம்பவம் அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.