புதிதாக மேம்பாலங்கள் அமைக்கப்படும் என மேயர் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 4-வது மண்டல ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டலத் தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். 4-ம் குடிநீர் திட்டப்பணிகள் ஜூன் மற்றும் மே மாதங்களுக்குள் நிறைவடைந்து சீரான குடிநீர் விநியோகிக்கப்படும். அதன்பிறகு குப்பைகளை சேகரிப்பதற்காக கூடுதல் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதனையடுத்து வீடுகளில் சென்று குப்பைகளை சேகரிப்பதற்காக 100 பேட்டரி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் மொத்தம் ஒரு நாளைக்கு 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் மறு சுழற்சி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் குப்பைகள் இல்லா மாநகரமாக திருப்பூர் உருவாகும். இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக 4 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். இதற்கான திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அரசின் அனுமதி பெற்று பணிகள் தொடங்கப்படும். மேலும் உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதிகளில் இருக்கும் குறைபாடுகளை தெரிவித்தனர். இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என மேயர் கூறினார்.