தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின் தேவை இருக்கும்போது 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் போது நிலக்கரி கையிருப்பு அரசு வைத்திருக்க வேண்டும். ஆனால் இதனை அரசு செய்யத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் இருந்து 3000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப் படுவதாகவும், இந்த ஆட்சியில்தான் இது மாதிரியான நிலைமை ஏற்படுவது மாதிரியான தோற்றத்தை உருவாக்கி பேசுவதாகவும் குற்றம் சாட்டினார். விலை கடுமையாக உயர்ந்து போதிலும் கடந்த ஓராண்டில் ஒரு டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படவில்லை என கூறினார். மேலும் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.