மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை வேறுஅமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்ட 25,500 மக்கள் நலப் பணியாளர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதனையடுத்து காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இவ்வழக்குகள் பல வருடங்களாக நிலுவலையில் இருந்து வந்தது. அதன்பின் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கடந்த 3 மாதங்களில் மக்கள் நலப் பணியாளர்களின் பணி நியமனம் குறித்த வழக்குகள் 3 முறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய் 7,500 சம்பளத்துடன் வேறு பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில் இன்று இவ்வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நலப் பணியாளர்கள் பற்றிய வழக்கை விரிவாக விசாரிப்பதற்காக வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் இவ்வழக்கு விரைவில் மற்றொரு அமர்வில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டுமாக வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு முன்பே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சென்ற 8ஆம் தேதி பேரவையில் ஊரகவளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மானியக் கோரிக்கையின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூபாய் 7,500 சம்பளத்துடன் வேறு பணி வழங்க முடிவு விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் 100 நாள் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளராக சேரலாம். 10 வருடங்களில் காலமான மக்கள் நலப்பணியாளர்களின் வாரிசுதாரர்களும் விரும்பினால் பணியில் சேரலாம் என்று தெரிவித்தார்.