மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் தான் மின்தடை ஏற்படுகிறது என்று சட்டசபையில் செந்தில்பாலாஜி விளக்கமளித்தார்.
மின்வெட்டு தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து பேசினார். அப்போது “மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின் தடை ஏற்படுகிறது, குறைந்த விலையில் 3000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும். குஜராத் மராட்டியத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் தடை ஏற்படுகிறது. தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது. அதுவும் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும். தமிழகத்தில் ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு ஒரு நாளைக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே வழங்குகிறது. மத்திய அரசு குறைந்த அளவு நிலக்கரிகளை ஒதுக்குவதால் தான் அடுத்து இரண்டு மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.