உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பணியில் சேர்வதற்கு 500-க்கும் மேலானோர், தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக அச்சடித்திருப்பதை அரசு தேர்வுகள் துறை கண்டுபிடித்திருக்கிறது. இதுவரை 2 ஆயிரத்து 500 மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் ஆயிரத்திற்கும் மேல் போலி என்பது தெரியவந்தது.
இந்நிலையில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்ட நபர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் அளித்து தமிழ்நாடு உட்பட பல்வேறுமாநில அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து பணிபுரிந்து வருவது உறுதியாகியிருக்கிறது. பெரும்பாலான மதிப்பெண் சான்றிதழ்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழ்களில் இந்தி முதன்மை மொழியாக அச்சடிக்கப்பட்டு போலியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருகின்றன.
இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் எழுத்து தேர்வு இன்றி மதிப்பெண் அடிப்படையில் அஞ்சல் அலுவலகங்களில் தேர்வு செய்யப்படும் பணிகளுக்காக போலியாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் தமிழ்நாடு போலி மதிப்பெண் சான்றிதழ்களை அளித்து பணியில் சேர்ந்த இருவரை கைது செய்து கர்நாடக காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.