பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, பழனி வழியாக மலைப்பாதைகள் அமைந்துள்ளது. இந்த மலைப் பாதையை கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த பாதையில் செல்கின்றனர்.
அதேபோன்று பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு கொடைக்கானல் போகின்றவர்களும் இந்த மலைப் பாதையை தான் பயன்படுத்துகின்றனர். எனவே விடுமுறை தினங்களில் பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் இலட்சக்கணக்கான வண்டிகள் செல்கின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பழனி, கொடைக்கானல் பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் பழனி கொடைக்கானல் பகுதியில் மழை அதிகமாக பெய்தது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் சவரிக்காடு 4-வது கொண்டை ஊசி வளைவு அருகில் பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவினால் ரோட்டில் மண்கள் விழுந்ததில் வண்டிகள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சாலையின் இரு பக்கமும் வரிசையாக நின்றன.
இதுகுறித்து பழனி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் ஜெயபாலன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் இயந்திரத்தை கொண்டு ரோட்டில் கிடந்த மண்ணை அகற்றினார்கள்.
அதன் பின் இந்த மலைப்பாதையில் போக்குவரத்து செல்ல ஆரம்பித்தது. இந்த மண்சரிவினால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது, மழைக்காலங்களில் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.