பள்ளிக்கூட மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியை உட்பட இருவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் முள்ளம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கின்ற கழிப்பறையை ஒரு மாணவன், ஒரு சிறுமி சுத்தம் செய்கின்ற வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது.
இந்த வீடியோவை பார்த்து பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்கூட மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவின்படி பெருந்துறை கல்வி மாவட்ட அதிகாரி அமுதா அந்த பள்ளிக்கு நேரில் சென்று தலைமையாசிரியர், மற்ற ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.
அதன்பின் அந்த விசாரணை முடிவு அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை மைதிலி மற்றும் ஆசிரியை சுதா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.