இந்தியாவிற்கு பிரித்தானியா உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம், வளர்ச்சி மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம் ஆகியவற்றை குறித்து பேசியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பிரித்தானிய பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் இருவரும் சந்திப்பு குறித்து கூறியுள்ளார், அதில் “ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் பதற்றம், பெருகிவரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் பிரித்தானியா இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு, பொருளாதார தடைகள் குறித்தும் எந்த ஒரு அழுத்தமும் தரவில்லை.
இதற்கிடையில் அமைதியின் பக்கம் எப்போதும் நிற்போம் எனவும் போர் பதற்றமானது பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கையின் மூலம் விரைவில் தீர்க்கப்படும் வேண்டும் என்று நரேந்திரா மோடி கூறியுள்ளார். மேலும் பிரித்தானியாவுடனான தடையற்ற வணிகம், ஆற்றல்கள் மீதான ஒத்துழைப்பு, இரு நாட்டு பாதுகாப்பு ஆகியவை தொடர்பான ஆலோசனை நடைபெற்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா இந்தோ-பசிபிக் பெருங்கடல் வர்த்தக முயற்சியில் பிரதானியாக இணைவதற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும்” தெரிவித்துள்ளார்.