பொள்ளாச்சியில் தப்பி ஓடிய கைதியை சில மணி நேரத்திலேயே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கருமாபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பரமசிவம். இவரின் உறவுக்கார பெண்ணுடன் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தவறாக பழகியதால் பரமசிவம் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று மாணிக்கம் மற்றும் பரமசிவன் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாணிக்கம் பரமசிவத்தை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகின்றது.
இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தார்கள். போலீசார் மாணிக்கத்தை மருத்துவ பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மதியம் 12 மணியளவில் கூட்டிச் சென்றுள்ளனர். போலீசார் டாக்டரை பார்க்க சென்றபோது மாணிக்கம் திடீரென அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனடியாக சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
பின் மருத்துவமனையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது பேருந்து நிலைய ரோட்டில் மாணிக்கம் ஓடும் காட்சி பதிவாகியிருந்ததையடுத்து போலீஸார் பாலக்காடு ரோடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு மாலை 5 மணியளவில் மாணிக்கத்தை பிடித்தார்கள். பின் விசாரணை நடத்தியதில் சிறை தண்டனைக்கு பயந்து தப்பி ஓடியது தெரியவந்தது. கைதி தப்பி ஓடிய சில மணி நேரங்களிலேயே போலீசார் பிடித்ததால் உயரதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.