ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் கீரனூர் மேம்பாலம் அருகில் சாலை ஓரமாக ஒரு வாகனம் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் காரை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காருக்குள் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பது தெரியவந்தது. இவர் நவீன அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து தனது சொந்த காரில் வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் ஜெயராமன் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். இவரது அருகில் விஷ பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. இதனால் ஜெயராமன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.