பிரான்ஸில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று(24.04.2022) நடைபெற உள்ளது. பரபரப்பான இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும், தீவிர இடதுசாரி கொள்கை கொண்ட மரீன் லெபென்னுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட மேக்ரான் அகதிகள் குடியேற்றத்தை மிக கடுமையாக எதிர்த்து வரும் லெபன் போன்ற இருவரில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸை ஆளப்போவது யார் என்ற கேள்வி அந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறப்படுகின்றது.
மேலும் தேர்தலில் மேக்ரான் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் 2017 ஆம் ஆண்டு தேர்தலை விட மிகக் குறைவான வாக்கு விகிதத்திலேயே அவர் வெற்றி பெறுவார் என அந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் லெபன் வெல்வதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்க்கில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் மேலான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முதல் இரு இடங்களை பிடித்த மேக்ரானுக்கும்,லெபனுக்கும் இடையே தற்போது இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகின்றது.