மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூன்றாம்சேத்தி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மின்மாற்றி மற்றும் மின்சாதனங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்தடையால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் இரட்டை புலி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.