Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

மாற்றத்தை நோக்கி அடி எடுத்துவைப்போம் – புரட்சி பேசும் ‘நாடோடிகள் 2’

2009இல் வெளியாகி ட்ரெண்ட் செட்டராக மாறிய ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயாராகிவிட்ட நிலையில், தற்போது புரட்சிகர காட்சிகளுடன் கூடிய அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

 சமுத்திரக்கனி – சசிக்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 2009இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘நாடோடிகள் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சசிக்குமார், பரணி, நமோ நாரயணா உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, அதுல்யா ரவி, எம்.எஸ். பாஸ்கர், சூப்பர் சுப்பராயன், பேச்சாளர் ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தில் காதல், நட்பு ஆகிய உறவுகளைப் பற்றி பேசிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது சாதி பிரச்னை, புரட்சி பற்றி பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. 2018ஆம் ஆண்டே படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இதையடுத்து படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

முதல் பாகத்தை இயக்கிய சமுத்திரக்கனி ‘நாடோடிகள் 2’ படத்தையும் இயக்கியுள்ளார். படத்துக்கு இசை – ஜஸ்டின் பிராபகரன். ஒளிப்பதிவு – என்.கே. ஏகாம்பரம். தயாரிப்பு – மெட்ராஸ் எண்டர்பிரைசைஸ் சார்பில் என். நந்தகோபால். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம் ஜனவரி 31ஆம் தேதி திரைக்கு வருகிறது.

நட்புக்காக காதலர்களை இணைத்து வைக்கும் நண்பர்கள் படும் துயரத்தை எதார்த்தம் கலந்த ஜனரஞ்சக ரீதியில் சொன்ன ‘நாடோடிகள்’ தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டிங் படமாக அமைந்தது. இதே பாணியில் அடுத்தடுத்து சில படங்கள் வெளியானபோதிலும், நாடோடிகள் தந்த தாக்கத்தை தராமல் போனது. இதையடுத்து ‘நாடோடிகள் 2’ ட்ரெய்லரில் சாதியம், போராட்டம், புரட்சி போன்றவற்றை காட்டும் விதமாக காட்சிகள் அமைந்திருகின்றன.

நாளையே மாற்றம் வேண்டும் என்கிற பேராசை இல்லை. ஆனால் அதை நோக்கி அடியெடுத்து வைப்போம்’ என்ற பாசிட்டிவான கருத்துடன் தொடங்குகிறது படத்தின் ட்ரெய்லர் காட்சி. இதையடுத்து படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் சமீப கால நிகழ்வுகளை முன்னிறுத்திய திரைக்கதையுடன் படம் அமைந்திருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |