அடுத்தடுத்து வந்த கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய மாரிமுத்து. இவர் சொந்த வேலை காரணமாக பழனிக்கு தன் மனைவியுடன் வந்தார். வேலை முடித்தவுடன் மோட்டார் சைக்கிளில் குழுமத்துக்கு இருவரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்.
இதுபோலவே திருப்பூர் மாவட்டத்திலுள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் அவரின் மனைவி பழனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு தம்பதியினரும் பழனி அருகே உள்ள அக்கமநாயக்கன்புதூர் பகுதியிலுள்ள கொழுமம் சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த பொழுது பழனி நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதனால் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தார்கள். இதுகுறித்து தகவல் அறிந்து பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நான்கு பேரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி சாகுல் அமீது மற்றும் மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்கள். பவித்ரா மற்றும் ஜாபர் நிஷா இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரை சேர்ந்த கார் டிரைவர் மகேந்திரனை கைது செய்தார்கள்.