கலவை இயந்திரத்தில் தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயாமொழி பள்ளத்தூர் பகுதியில் ஆறுமுகப்பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லாமொழி அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகப்பெருமாள் கடந்த 22-ஆம் தேதி மண் கலவை இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ஆருமுகப்பெருமாளை உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு ஆறுமுகப்பெருமாளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆறுமுகப்பெருமாளின் தம்பி முனீஸ்வரன் குலசேகரப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.