Categories
தேசிய செய்திகள்

விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்

 மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேக ராவ் மவுனம் காத்து வந்தார். தற்போது அவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் இந்த திருத்தச் சட்டம் 100 விழுக்காடு தவறான முடிவு என்றும் 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவுக்கு இது நல்லதல்ல என்றும் இது குறித்து தான் ஏற்கனவே பல முதலமைச்சர்களிடமும் மற்ற கட்சிகளின் தலைவர்களிடமும் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஹைதராபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மாநில முதலமைச்சர்கள் மாநாடு விரைவில் நடைபெறும் என்றும் தெலங்கானா சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |