திருப்பதியில் இப்போது தினசரி 70,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக பக்தர்கள் காத்திருக்ககூடிய அறைகள் அனைத்தும் நிரம்பிவழிகிறது. தரிசனத்துக்கு சுமார் 5 மணிநேரம் வரை ஆகிறது. முன்பே இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரே சமயத்தில் பக்தர்கள் டோக்கன் கவுண்டர்களில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து டோக்கன்முறை ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் பக்தர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், சீனிவாசம் ஆகிய இடங்களில் தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின் ஜவஹர்ரெட்டி கூறியிருப்பதாவது “திருப்பதியில் பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு பக்தர்களின் கூட்டம் அதிகமானதால் வரிசையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டது. அதனை மீண்டுமாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதற்குள் தரிசன வரிசையில் மாற்றங்கள் செய்யவும், முன்பை விட வேகமாக இலவச தரிசன டோக்கன்கள் வழங்கவும் தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவ்வாறு டிக்கெட் வழங்கப்படும் 3 கவுண்டர்களில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கவும், நிழற்கூரைகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குரிய பணிகள் நிறைவடைந்ததும் விரைவில் இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் டோக்கன் விநியோகம் தொடங்கப்படும்” என்று கூறினார்.