சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஒரு கிராமத்தை பேய்கள் சூழ்ந்துள்ளதாக நம்பிய பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி ஒரு ஊரடங்கை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலமான ஸ்ரீகாகுளம் மாவட்டம் சருபுஜ்ஜிலி கிராமத்தில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த கிராமத்தில் முன்பே பேய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். தற்போது அடுத்தடுத்து 5 பேர் இறந்ததால் இது பற்றி அப்பகுதியை சேர்ந்த மந்திரவாதியிடம் கேட்டனர். அப்போது அவர் கிராமத்தைசுற்றி பேய்கள் சூழ்ந்துள்ளது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சிறப்பு பூஜைகள் செய்யவேண்டும் என தெரிவித்தார். அந்த வகையில் சருபுஜ்ஜிலி கிராமத்தை ஆவிகள் சூழ்ந்துள்ளதாக நம்பிய மக்கள், அதை விரட்ட பூஜை செய்து வருகின்றனர்.
அத்துடன் 2 நாட்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். நாளை இந்த சிறப்பு பூஜையானது நடைபெறுகிறது. இதற்காக கிராமத்தைவிட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனை அறிந்த காவல்துறையினர் அந்த கிராமத்திற்கு சென்று பேய்கள் என்பது உலகத்தில் கிடையாது. இதுபோன்ற மூட நம்பிக்கைகளை நம்பவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை கூறினர். எனினும் கிராமமக்கள் தொடர்ந்து பூஜையை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் கூறியிருப்பதாவது “கிராமத்தில் பல வருடங்களாக அமாவாசை சிறப்புபூஜை நடத்தப்பட்டதால், மக்கள் நலமாக இருந்தனர். இதற்கிடையில் சில வருடங்களாக பூஜை நடக்கவில்லை. இதன் காரணமாக கிராமத்தலைவர் உட்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர். ஆகவே கிராமத்தை ஆவிகள் சூழ்ந்து உள்ளதாக கூறினர். இதனிடையில் பூஜை நடைபெறும் நாட்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று ஊரடங்கை அமல்படுத்தினோம். கொரோனாவை விரட்ட நாட்டில் ஊரடங்கு அமலானது போன்று, ஆவிகளை ஒழிக்க ஊரடங்கு பிறப்பித்துள்ளோம். என்று அவர்கள் கூறினர்.